யூதர்களுடன் தொடர்பும் ஒருமித்த குறிக்கோளும் எதிர்நோக்கும் தமிழர்கள்

அமெரிக்கத் தமிழ் அமைப்பு யூதர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான பழமையான மற்றும் நவீனகாலத்தொடர்புகளை நினைவுபடுத்தி தற்போது இருவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் எதிரிகளைச் சந்திக்க ஒத்த குறிக்கோளுடன் ஒன்றுபட்டு இயங்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு ஒபாமாவுக்கான தமிழர்கள் உலகளாவிய யூத அமைப்புகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நியூயார்க்--ஆகஸ்டு 5, 2005 --தமிழர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் பல பொதுவான விடயங்கள் உள்ளன என ஒபாமாவுக்கான தமிழர்கள் கூறுகிறார்கள். இரு இனத்தவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ச்சியான பண்பாட்டைப் பெற்ற பழமையான மக்கள். இருவரது மொழிகளும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இரண்டு சமுதாயங்களும் இராணுவ ரீதியில் பலமான எதிரிகளின் கையில் அவதிப்பட்டுள்ளனர். இருவரும் புலம்பெயர்ந்தோர் சமுதாயத்தைக் கொண்டுள்ளன. மிக முக்கியமான இருவரும் அவர்களை அழித்தொழிக்கும் இனவழிப்புக் கொள்கைக்கு ஆளாகியுள்ளனர்.

ஒபாமாவுக்கான தமிழர்கள் இந்த ஒற்றுமைகளை முக்கிய உலகளாவிய யூத அமைப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளனர்.

இந்தக் கடிதம் நட்பு முறையில் தொடங்குகிறது. "எங்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். நாங்கள் தமிழர்கள். எங்களுக்கு யூதர்களுடன் பொதுவான சில விடயங்கள் உள்ளன." 

கடிதம் இரண்டு இனத்தவரின் ஒரேமாதிரியான வரலாறுகளை விவரிக்கிறது. "தமிழர்களும் யூதர்களும் பழமையான மக்கள். தமிழர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை சிந்துச் சமவெளியில் கட்டினார்கள். இந்த நகரங்கள் அக்காலத்தில் யூதர்களின் தாயகமாக விளங்கிய மெசபடோமியாவுடன் நெருங்கிய வாணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தன. இந்த இரண்டு தமிழ் நகரங்களும் கி.மு.1900 வாக்கில் நலிவடைந்ததாகக் கருதப்படுகிறது, அதனால் நாங்கள் உங்களை விட இன்னும் பழமையானவர்களாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது" எனக் குறிப்பிடுகிறது.

"எங்களது தாயகத்தின் வட இந்தியப் பகுதியில் முதல் 'ஆரியப் படையெடுப்பு கி.மு.1500-களில் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது, அதன்பின்னர் பல படையெடுப்புகள் தொடர்ந்தன. காலப்போக்கில் தமிழ் நாகரிகத்தின் மையம் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் நகர்ந்து இப்போது உலகின் ஒவ்வொரு நாட்டிலும் குடியேறியிருக்கும் புலம்பெயர்ந்தோர் மூலம் உலகெங்கும் பரவியிருக்கிறது." 

"சிந்துச் சமவெளியைத் தாக்கி அழித்த ஆரியர்களுக்கும் ஜெர்மானிய நாசிக்களுக்கும் இடையிலான தொடர்பை யூதர்கள் உணர்ந்தே தீருவார்கள்; ஏனென்றால், நாசிக்களும் தங்களை ஆரியர்கள் என்றே அழைத்துக் கொண்டார்கள்" என ஒபாமாவுக்கான தமிழர்களின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

பல மேலோட்டமான மொழித் தொடர்புகளையும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார். "எபிரேய வார்த்தை அப்பா(abba) அப்பா(appa) என்ற தமிழ் வார்த்தையை ஒத்து இருக்கிறது. தாயை எபிரேய மொழியில் இம்மா என்றும் தமிழில் அம்மா என்றும் அழைக்கிறார்கள். இந்த ஒற்றுமைகள் பொதுவான தோற்றத்தைக் குறிக்கின்றனவா அல்லது பொதுவான மூலத்தில் இருந்து கடன் வாங்கியதைக் குறிக்கின்றனவா அல்லது வெறும் குருட்டாம் போக்கான ஒற்றுமைகளா என்பது தெளிவில்லை. ஆனால் நாம் இரு மொழிகளும் ஒன்றாகத் தோன்றியதைக் குறிப்பதாக நம்புகிறோம்" எனக் குறிப்பிடப்படுள்ளது.

யூதர்களை வெறுக்கும் அதே மக்கள் தமிழர்களையும் வெறுப்பதை ஒபாமாவுக்கான தமிழர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். "சதாம் ஹூசைன் யூதர்களையும் இஸ்ரேலையும் வெறுத்தான். பாக்தாத் நகரில் வாழ்ந்த யூதர்களை எல்லாம் இஸ்ரேலின் உளவாளிகள் என்று புனைந்து அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றமை நம் நினைவில் இன்னும் இருக்கிறது. அவன் இலங்கைத் தமிழர்களை அழித்தொழிக்க முனையும் கொழும்பு அரசுக்குத் தாராளமாக உதவிகள் செய்பவனாகவும் இருந்தான். (யூதர்கள் சதாமும் அவனது பாத் கட்சியும் ஆட்சிக்கு வரும் முன்னால் பாக்தாத்தில் 25% இருந்தனர்; ஆனால் இப்போதோ சில டஜன்கள் கூட இல்லை. தமிழர்கள் சிலோன் மக்கள் தொகையில் 1948-ல் 30% ஆனால் இப்போதோ வெறும் 20% தான்; கொழும்புவும் சதாமின் திசையில் முன்னேற்றம் கண்டு வருகிறது). நமது எதிரிகள் ஒன்றிணைந்து விட்டனர், நாமும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது. யூதர்களின் எதிரிகளான ஈரானும் லிபியாவும் கூட கொழும்புவின் கூட்டாளிகளாக உள்ளனர்"  எனக் கூறப்பட்டுள்ளது.

பெயர்பெற்ற யூதர்களின் உரைகளை மேற்கோள் காட்டி கடிதம் முடிகிறது: எல்லி வீசல் இவ்வாறு கூறினார்: 'எங்கெல்லாம் சிறுபான்மையினர் நசுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் நாம் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். நம்பகமான மூலங்களின் படி தமிழ் மக்கம் ஸ்ரீலங்கா அதிகாரிகளால் குடிமக்களுக்கான உரிமைகளை இழந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அநீதி நிறுத்தப்பட்ட வேண்டும். தமிழர்கள் தங்கள் தாயகத்தில் அமைதியில் வாழவும் வளம் பெறவும் அனுமதிக்கப்பட வேண்டும்.' 

"யாராவது உரிமைகள் பறிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாவதை இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினால் அவர்களுக்கு ஆதாரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறோம்" எனக் கடிதம் உரைக்கிறது.

"காலஞ்சென்ற நோபெல் பரிசு பெற்ற ஆன்ட்ரே சகாரோவின் மனைவி யெலினா சகாரோவ் இஸ்ரேலுக்கு ஆதரவான அழுத்தமான உரை ஒன்றை ஓஸ்லோ விடுதலை மன்றத்தில் பேசினார். அவர் இன்னொன்றையும் கேட்டார் 'தமிழ்ப் புலிகளின் மீதான தாக்குதல் நடந்த கடந்த நான்கு மாதங்களில் ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் ஒரு முறையாவது ஜனாதிபதி ஒபாமா ஏதாவது அறிக்கை வெளியிட்டாரா? அவர் அவ்வாறு செய்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருக்கலாம், மனிதப் பேரவலம் தடுக்கப்பட்டிருக்கலாம், அமைதிப் பேச்சுக்கள் மீள் துவக்கப்பட்டிருக்கலாம். அவர் செய்தாரா?'"

தமிழர்களின் கடிதம் இலங்கையில் பணியாற்றியுள்ள யூத மனித உரிமை ஆர்வலர் மற்றும் செயல்வீரர் முனைவர்.எல்லின் ஷாண்டரையும் மேற்கோள் காட்டுகிறது. அவர் கூறியுள்ளதாவது: "இன்று இலங்கையில் 3,00,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அவர்கள் சிறுபான்மையினர் என்பதால அவர்களது அரசாங்கத்தாலேயே வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மனிதத்தன்மையின்றி நடத்தப்படுகிறார்கள். அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள், பட்டினியால் வதைக்கப்படுகிறார்கள், மருத்துவம் மறுக்கப்படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் தங்கள் தாயகமான நாட்டின் வடபகுதிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்படுகிறார்கள். நாசிக்கள் பயன்படுத்திய அதே செயல்முறைகளைப் பயன்படுத்துவது இரத்தத்தை உறைய வைப்பதாக இருக்கிறது. "இனி ஒருபோதும் இல்லை" என்று கூறும் முழக்கம் அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் இந்த இனப் படுகொலை கேட்பாரற்று பன்னாட்டு சமூகத்தின் முன்னிலையில் நடக்கிறது. சீனாவை சந்தோஷப்படுத்த அரசுகள் முனைய,  அது ஸ்ரீலங்கா - சீனா கூட்டணி ஒரு பழமையான மக்களையும் அவர்களது பண்பாட்டையும் பூமியிலிருந்தே அழித்தொழிக்க ஏதுவாக ஆக்குகிறது.

"தமிழர்களின் போராட்டம் நமது போராட்டமும் ஆகும்."

கடிதம் இவ்வாறு முடிவடைகிறது "மிக முக்கிய கருத்து: யூதர்கள் அவர்களை அழித்தொழிக்க வரலாற்றில் அண்மையில் நடைபெற்ற ஹாலோகாஸ்ட் எனப்படும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள். இலங்கைத் தமிழர்கள்களும் 1948-ல் தொடங்கி இன்னும் தொடரும் அவ்வாறான இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நம் இருவருக்கும் இடையிலான இந்தத் துயரமான தொடர்பு நமக்குள்ள பொதுவான காரணியாக இருப்பதால் தமிழர்களாகிய நாங்கள் யூதர்களை உதவிக்கு அழைக்கிறோம்."

இக்கடிதத்தை முழுமையாகப் படிப்பதற்கு, இங்கே செல்லவும்: www.tamilsforobama.com/letters/Tamil_J_PR.html

தமிழர்கள் பெரும்பான்மையாக வடகிழக்கு இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வாழும் ஓர் இனக்குழுவினர். ஐக்கிய நாடுகளின் கூற்றின் படி அண்மையில் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரில் இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 1,000 அப்பாவித் தமிழர்கள் என்ற கணக்கில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர் மற்றும் 2009-ல் மட்டும் 30,000 பேர் கொல்லப்பட்டனர். தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மை இனத்தவராவர் மற்றும் அவர்கள் இனப்படுகொலை எனக் கருதும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்கள். மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் தீவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து வருகின்றனர். ஒபாமாவுக்கான தமிழர்கள் அவ்விதமாக அமெரிக்காவில் குடியேறிய அல்லது அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட அமைப்பாகும்.

இக்குழுவைத் தொடர்பு கொள்ள, (617) 765- 4394 என்ற எண்ணை அழையுங்கள், அல்லது தொடர்பு இயக்குனர், ஒபாமாவுக்கான தமிழர்கள் என்பவருக்கு செய்தி விடுங்கள்.
www.TamilsForObama.com